Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜோதிடமும் குறிசொல்லுதலும்​—⁠எதிர்காலத்தைக் கணிக்க உதவுமா?

ஜோதிடமும் குறிசொல்லுதலும்​—⁠எதிர்காலத்தைக் கணிக்க உதவுமா?

ஜோதிடம்

ஜோதிடம் என்பது ஒருவிதமான குறிசொல்லும் பழக்கத்தைக் குறிக்கிறது. நட்சத்திரங்களும் கோள்களும் சந்திரனும் மனிதனுடைய வாழ்க்கையைப் பெருமளவு கட்டுப்படுத்துவதாகப் பலர் நம்புகிறார்கள். ஒருவர் பிறக்கும்போது, நட்சத்திரங்களும் கோள்களும் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே அவருடைய சுபாவமும் எதிர்காலமும் இருக்குமென்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.

ஜோதிடம் பூர்வ பாபிலோனில் ஆரம்பமானது என்றாலும், இன்றுவரை அது பிரபலமாக இருக்கிறது. 2012-ஆம் வருஷம், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, ஜோதிடம் “அறிவியல்பூர்வமானதாக இருக்கலாம்” என்று மூன்றிலொரு பங்கு மக்கள் சொன்னார்கள். 10 சதவீத மக்கள், அது “கண்டிப்பாக அறிவியல்பூர்வமானதுதான்” என்று சொன்னார்கள். இது உண்மைதானா? இல்லை! ஏன் என்று கவனியுங்கள்:

  • ஜோதிடர்கள் சொல்கிறபடி கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் மனிதனைக் கட்டுப்படுத்துகிற எந்தவொரு சக்தியும் கிடையாது.

  • கணிப்புகள் யாருக்கு வேண்டுமானாலும் பொருந்துகிற விதத்தில் பெரும்பாலும் பொதுப்படையாக இருக்கின்றன.

  • கிரகங்கள் பூமியைச் சுற்றி வருகின்றன என்ற பழங்கால நம்பிக்கையின் அடிப்படையில்தான் இன்றைய ஜோதிடக் கணிப்புகள் இருக்கின்றன. ஆனால் உண்மையில், கிரகங்கள் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன.

  • ஒரே நபரைப் பற்றி வேறு வேறு ஜோதிடர்கள் செய்யும் கணிப்புகள் ஒத்துப்போவதில்லை.

  • பிறந்த தேதியை வைத்துதான், ஜோதிடம் மக்களை 12 பிரிவினர்களாக, அதாவது 12 ராசிக்காரர்களாக, பிரிக்கிறது. ஆனால், நூற்றுக்கணக்கான வருஷங்களாக, பூமியின் நிலையில் (position) மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருப்பதால், ராசி நட்சத்திரங்களின் தேதிகள் அந்தந்த ராசி நட்சத்திரக்கூட்டத்தோடு இன்று சரியாகப் பொருந்துவது கிடையாது.

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய ராசியை வைத்து சொல்லிவிடலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே, ஒரே தேதியில் பிறந்தவர்களுக்கு ஒரேமாதிரியான குணங்கள் இருப்பதில்லை; ஒருவருடைய பிறந்த தேதி அவருடைய சுபாவத்தைப் பற்றி எதுவுமே சொல்வதில்லை. மக்களுடைய உண்மையான சுபாவத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒருசில ஊகங்களின் அடிப்படையில் இவர்களுடைய குணங்களும் செயல்களும் இப்படித்தான் இருக்குமென்று ஜோதிடர்கள் தீர்மானித்துவிடுகிறார்கள். இப்படிச் செய்வது ஒருவரைப் பற்றித் தவறாக முடிவுகட்டி விடுவதுபோல் ஆகாதா?

குறிசொல்லுதல்

அந்தக் காலத்திலிருந்தே மக்கள் குறிகேட்டு வந்திருக்கிறார்கள். குறிசொல்பவர்களில் சிலர், மிருகங்கள் மற்றும் மனிதர்களுடைய உள்ளுறுப்புகளையோ அல்லது சேவல் தானியத்தைக் கொத்தும் விதத்தையோ பார்த்து குறிசொல்லியிருக்கிறார்கள். வேறு சிலர், தேயிலை மற்றும் காபி கசடுகளை வைத்து எதிர்காலத்தைக் கணித்திருக்கிறார்கள். ஆனால் இன்று, ஜோசிய சீட்டுகள், மாயக் கற்கள், தாயங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஒருவருடைய எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள். இப்படிப்பட்ட குறிசொல்லும் வழிமுறைகள் நம்பகமானவையா? கண்டிப்பாக இல்லை! ஏன் என்று இப்போது பார்க்கலாம்.

கணிப்புகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. ஒரே விஷயத்தைப் பற்றி பல விதமான முறைகளில் சொல்லப்படும் கணிப்புகள் பெரும்பாலும் ஒன்றோடொன்று ஒத்துப்போவதில்லை. ஒரே வழிமுறையைப் பயன்படுத்தி சொல்லப்படும் கணிப்புகள்கூட வேறுபடுகின்றன. உதாரணத்துக்கு, எதிர்காலத்தைப் பற்றிய ஒரு கேள்வியைக் குறிசொல்லும் இரண்டு பேரிடம் கேட்பதாக வைத்துக்கொள்வோம்; இருவரும் ஒரே ஜோசிய சீட்டுகளை வைத்து கணிக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால், அவர்களுடைய கணிப்புகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அவை பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை.

குறிசொல்பவர்கள் பயன்படுத்துகிற வழிமுறைகளையும், அவர்களுடைய நோக்கத்தையும் பலர் சந்தேகிக்கிறார்கள். ஜோசிய சீட்டுகளும் மாயக் கற்களும் சாதாரண பொருள்கள்தான் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால், குறிசொல்பவர் இவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தன்னிடம் குறிகேட்க வருகிற நபருடைய பிரதிபலிப்பை வைத்தே குறிசொல்கிறார். உதாரணத்துக்கு, குறிசொல்வதில் பேர்போன ஒருவர், குறிகேட்க வருகிறவரிடம் பொதுவான சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, அவர் சொல்கிற பதில்களையும் அவருடைய முகபாவனைகளையும் கூர்ந்து கவனிப்பார். அவற்றிலிருந்து சில விவரங்களைச் சேகரிக்க முயற்சி செய்வார். குறிகேட்பவர் எதார்த்தமாகச் சொன்ன தகவல்களை வைத்து, அவரைப் பற்றிய விவரங்களைச் சரியாகக் கணிப்பதுபோல் காட்டிக்கொள்வார். குறிகேட்க வந்தவரும் உச்சிகுளிர்ந்துபோய் அவர் கேட்கிற பணத்தைக் கொடுத்துவிடுவார். குறிசொல்பவர்கள் சிலர் வாடிக்கையாளர்களிடமிருந்து இப்படித்தான் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கறந்துவிடுகிறார்கள்.

பைபிள் என்ன சொல்கிறது?

ஜோதிடமும் குறிசொல்லுதலும், விதி என்ற ஒன்று இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால், உண்மையில் விதி என்ற ஒன்று இருக்கிறதா? எந்த விஷயத்தை நம்ப வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் உரிமை நமக்குத்தான் இருக்கிறதென்று பைபிள் சொல்கிறது. நம்முடைய தீர்மானங்களைப் பொருத்துதான் நம்முடைய எதிர்காலம் இருக்குமென்றும் அது சொல்கிறது.—யோசுவா 24:15.

கடவுளை வணங்குபவர்கள் ஜோதிடத்தையும் குறிகேட்பதையும் ஒதுக்கித்தள்ளுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. எல்லா விதமான குறிசொல்லுதலையும் கடவுள் கண்டனம் செய்கிறார் என்பதே அந்தக் காரணம். பைபிள் இப்படிச் சொல்கிறது: “உங்களில் யாருமே . . . குறிசொல்லவோ, மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ, சூனியம் வைக்கவோ, வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம் அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ, இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு a அருவருப்பானவர்கள்.”—உபாகமம் 18:10-12.

a ‘பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுளுடைய’ பெயர்.—சங்கீதம் 83:18.