Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகெங்கும் தண்ணீர்ப் பிரச்சினை—பைபிள் என்ன சொல்கிறது?

உலகெங்கும் தண்ணீர்ப் பிரச்சினை—பைபிள் என்ன சொல்கிறது?

 நாம் எல்லாருமே உயிர்வாழ சுத்தமான தண்ணீர் தேவை. ஆனால், “உலகம் முழுவதும் தண்ணீருக்கான தேவை அதிகமாகிக்கொண்டே போவதால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கப்போகிறது” என்று ஐநா-வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கிறார். ஏற்கெனவே கோடிக்கணக்கான உலக மக்கள், குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

Strdel/AFP via Getty Images

 என்றாவது ஒருநாள் நம் எல்லாருக்குமே போதுமான அளவு தண்ணீர் கிடைக்குமா? அல்லது, எப்போதுமே தண்ணீர்ப் பிரச்சினையோடு நாம் போராடிக்கொண்டிருக்க வேண்டுமா? பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் தரும் வாக்கு

 தண்ணீர்த் தட்டுப்பாடே இல்லாத ஒரு காலம் வரப்போவதாக பைபிள் சொல்கிறது. அப்போது, சுத்தமான தண்ணீர் நம் தேவைக்கும் அதிகமாகவே கிடைக்கும்.

 “வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கும். பாலைநிலத்தில் ஆறுகள் பாய்ந்தோடும். வறண்ட நிலம் நாணல் நிறைந்த குளமாக மாறும். தண்ணீர் இல்லாத நிலத்தில் நீரூற்றுகள் புறப்படும்.”—ஏசாயா 35:6, 7.

 பைபிள் கொடுக்கும் இந்த வாக்குறுதியை நாம் ஏன் நம்பலாம்? கடவுளுடைய ஒரு கைவண்ணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

பூமியையும் நீர் சுழற்சியையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

 “[கடவுள் இந்தப் பூமியை] காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.”—ஏசாயா 45:18.

 உயிரினங்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான எல்லாமே கிடைக்கும் விதத்தில்தான் கடவுள் இந்தப் பூமியைப் படைத்திருக்கிறார். சுத்தமான தண்ணீரும் ஏராளமாகக் கிடைப்பதற்காக இயற்கைச் சுழற்சிகளை அவர் உருவாக்கியிருக்கிறார்.

 “[கடவுள்] தண்ணீரை ஆவியாக மேலே போக வைக்கிறார். அதை மழையாகவும் பனியாகவும் கீழே வர வைக்கிறார். அது மேகங்களிலிருந்து பொழிகிறது. மனுஷர்கள்மேல் பெய்கிறது.”—யோபு 36:27, 28.

 எல்லாருக்கும் எப்போதுமே தண்ணீர் கிடைப்பதற்காக இயற்கையில் கடவுள் செய்திருக்கும் நீர் சுழற்சி என்ற அற்புதத்தைப் பற்றித்தான் இந்த வசனம் சொல்கிறது. நிலத்திலும் கடலிலும் இருக்கும் தண்ணீர் ஆவியாக மேலே போய், மேகமாக உருவாகி, மழையாகக் கீழே கொட்டுகிறது. இப்படி, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தேவையான சுத்தமான தண்ணீர் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.—பிரசங்கி 1:7; ஆமோஸ் 5:8.

 “அந்தந்த பருவங்களில் மழை பெய்யும்படி செய்வேன். நிலம் விளைச்சல் தரும், மரம் கனி கொடுக்கும்.”—லேவியராகமம் 26:4.

 அன்றிருந்த இஸ்ரவேல் மக்களுக்குத்தான் இந்த வாக்குறுதியைக் கடவுள் கொடுத்தார். அவர்கள் விவசாயிகளாக இருந்தார்கள். அவர்களுக்கு அமோக விளைச்சல் கிடைப்பதற்காக அந்தந்த காலத்தில் மழை பெய்ய வைப்பதாகக் கடவுள் சொன்னார். தவறாமல் மழை பெய்தால்தான் பயிர்கள் வளரும் என்று கடவுளுக்குத் தெரியும்.

 அன்று இஸ்ரவேல் தேசத்தை ஆசீர்வதித்தது போலவே இந்த முழு பூமியையும் கடவுள் சீக்கிரத்தில் ஆசீர்வதிக்கப்போகிறார். (ஏசாயா 30:23) அதுவரை, உலகத்தில் நிறைய இடங்களில் தண்ணீர்ப் பிரச்சினை அதிகமாகிக்கொண்டே போவதற்கு ஒரு காரணம், சரியாக மழை பெய்யாததுதான். இந்தப் பிரச்சினைக்கு வேறென்ன தீர்வு இருப்பதாக பைபிள் சொல்கிறது?

தண்ணீர்ப் பிரச்சினை எப்படி முடிவுக்கு வரும்?

 இன்று பூமியில் இருக்கும் தண்ணீர்ப் பிரச்சினையையும் சரி, மற்ற எல்லா பிரச்சினைகளையும் சரி, கடவுள் தன் அரசாங்கத்தின் மூலம் சரிசெய்யப்போவதாக பைபிள் சொல்கிறது. (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்து பூமி முழுவதையும் ஆட்சி செய்யும். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 11:15) அதுமட்டுமல்ல, மனித அரசாங்கங்களால் செய்ய முடியாத ஒன்றைக் கடவுளுடைய அரசாங்கம் செய்யும்: தண்ணீர்ப் பிரச்சினைக்குக் காரணமான எல்லாவற்றையும் அது சரிசெய்யும்!

 பிரச்சினை: வானிலை மாற்றம் நீர் சுழற்சியை ரொம்பவே பாதிக்கிறது. அதனால், ஒருபக்கம் கடுமையான வறட்சி ஏற்படுகிறது. இன்னொரு பக்கம், மழை கொட்டித் தீர்ப்பதாலோ கடல் மட்டம் உயர்வதாலோ பயங்கரமான வெள்ளம் ஏற்படுகிறது.

 தீர்வு: சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் எல்லா பாதிப்புகளையும் கடவுளுடைய அரசாங்கம் சரிசெய்யும். “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என்று கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:5) வறண்ட நிலங்களில் சுத்தமான தண்ணீர் பாய்ந்தோடும். இன்று உயிரினங்களால் வாழவே முடியாத இடங்கள்கூட செழிப்பாகிவிடும்; சொல்லப்போனால், அங்கே ஏராளமான உயிரினங்கள் வாழும். (ஏசாயா 41:17-20) அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசு இந்தப் பூமியின் இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்துவார்.

 இயேசு பூமியில் இருந்தபோது, பயங்கரமான ஒரு புயல்காற்றை அடக்கினார். கடவுள் அவருக்கு எந்தளவு சக்தி கொடுத்தார் என்று இதிலிருந்து தெரிகிறது. (மாற்கு 4:39, 41) இயேசு ஆட்சி செய்யும்போது, இயற்கைப் பேரழிவுகள் எங்குமே நடக்காது. அதனால், மக்கள் எப்படிப்பட்ட பேரழிவுகளையும் நினைத்துப் பயப்படாமல், உண்மையான பாதுகாப்போடும் சமாதானத்தோடும் வாழ்வார்கள்.

 பிரச்சினை: பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காத மனிதர்களும் பேராசை பிடித்த நிறுவனங்களும் இன்றைக்கு இருக்கிற ஆறுகளையும் ஏரிகளையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தியிருக்கிறார்கள். சுத்தமான தண்ணீர் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம்.

 தீர்வு: கடவுள் இந்தப் பூமியைச் சுத்தமாக்குவார். அப்போது ஆறு, ஏரி, கடல், மண் என எல்லாவற்றையும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவருவார். இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும்! “வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும். பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்” என்று பைபிள் சொல்கிறது.—ஏசாயா 35:1.

 சுற்றுச்சூழலைப் பற்றியும் மற்ற மனிதர்களைப் பற்றியும் அக்கறையே இல்லாத ஆட்களுக்கு என்ன நடக்கும்? ‘பூமியை அழிக்கிறவர்களை அழிக்கப்போவதாக’ கடவுள் சொல்லியிருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 11:18, அடிக்குறிப்பு; நீதிமொழிகள் 2:21, 22.

 பிரச்சினை: மனிதர்கள் இன்று தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில்லை. அதனால், இந்தப் பூமி உற்பத்தி செய்கிற தண்ணீரைவிட மனிதர்கள் வீணாக்குகிற தண்ணீர் அதிகமாக இருக்கிறது.

 தீர்வு: கடவுளுடைய அரசாங்கம் கடவுளுடைய விருப்பத்தைத்தான் ‘பூமியில் நிறைவேற்றும்,’ சுயநலமான மனிதர்களின் விருப்பத்தை நிறைவேற்றாது. (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய அரசாங்கம் அதன் குடிமக்களுக்கு மிகச் சிறந்த கல்வியைக் கொடுக்கும். “பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்று ஏசாயா 11:9 சொல்கிறது. a அதோடு, கடவுள்மேலும் அவருடைய எல்லா படைப்புகள்மேலும் மனிதர்களுக்கு நிறைய அன்பு இருக்கும். அதனால், அவர்கள் இந்த அழகான பூமியையும் அதன் இயற்கை வளங்களையும் ரொம்ப நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள்.

  •    கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும் என்பதைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

  •    பூமி எப்படி ஒரு பூஞ்சோலையாக மாறும் என்பதைப் பற்றி பைபிளில் ஏசாயா 35-ம் அதிகாரத்தில் படித்துப் பாருங்கள்.

  •    கடவுள் எதற்காக இந்தப் பூமியையும் மனிதர்களையும் படைத்தார் என்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள கடவுள் ஏன் பூமியைப் படைத்தார்? என்ற வீடியோவைப் பாருங்கள்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.