Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

உலகளாவிய பெருந்தொற்றுக்கு உலகளாவிய நிவாரண உதவி

உலகளாவிய பெருந்தொற்றுக்கு உலகளாவிய நிவாரண உதவி

ஜூலை 1, 2021

 மார்ச் 2020-ல் உலக சுகாதார அமைப்பு கோவிட்-19-ஐ ஒரு பெருந்தொற்று என்று அறிவித்தது. ஆனால் அந்த சமயத்தில், இந்த தொற்று ஒரு வருஷத்துக்கும் மேல் உலகத்தையே வாட்டியெடுக்கும் என்று யாருமே நினைக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகள் உட்பட நிறைய பேரை இது பாதித்தது. கோடிக்கணக்கான மக்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டார்கள். பணக் கஷ்டமும் வந்தது. இந்த நிலைமையை தாக்குப்பிடிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் நிவாரண வேலைகளை எப்படி ஏற்பாடு செய்தார்கள்?

உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி

 யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின், ஒருங்கிணைப்பாளர்களின் குழு கொடுத்த வழிநடத்துதலின்படி 950-க்கும் அதிகமான பேரழிவு நிவாரண குழுக்கள் (DRC) கோவிட்-19 சமயத்தில் உலகம் முழுதும் நியமிக்கப்பட்டன. சில இடங்களில், உள்ளூரிலேயே உதவி கிடைப்பதற்கு இந்தக் குழுக்கள் ஏற்பாடு செய்தன. வேறு சில இடங்களில், அரசாங்கங்கள் செய்த உதவியால் சாட்சிகள் நன்மையடைந்தார்கள். இந்த நிவாரண குழுக்கள் பெரிய அளவிலும் நிவாரண வேலைகளை ஏற்பாடு செய்தன.

 உதாரணத்துக்கு, பராகுவேயில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். பெருந்தொற்றினால் பராகுவேயில் பொருளாதாரம் அடி வாங்கியது. இதைப் பற்றி அங்கிருந்த ஒரு செய்தித்தாள் இப்படி சொன்னது: “நம்முடைய நாட்டில் இருக்கிற நிறைய பேருடைய வீட்டில் சாப்பாடே இல்லாததால் எல்லாரும் பசியில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள்.” ஆனால், அங்கே இருக்கிற நம்முடைய நிவாரண குழுக்கள் பாதிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்கு இரண்டு வாரத்துக்கு தேவையான பொருள்களை ஏற்கெனவே ஒரு பார்சலாக செய்து கொடுத்துவிட்டார்கள். ஒவ்வொரு பார்சலிலும் அவர்களுக்கு தேவையான சாப்பாடும் சுத்தம் செய்வதற்கு தேவையான பொருள்களும் சுகாதாரத்தை காத்துக்கொள்வதற்கு தேவையான பொருள்களும் இருந்தன. நான்கு பேர் இருக்கிற ஒரு குடும்பத்துக்கு இது போதுமானதாக இருந்தது. ஒரு பார்சலில் இருந்த பொருள்களுடைய விலை கிட்டத்தட்ட 30 அமெரிக்க டாலர்கள்.

 நிவாரண வேலையை செய்தவர்கள் தங்களையும் மற்றவர்களையும் கோவிட்-19 தொற்றிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொண்டார்கள்? அவர்கள் மாஸ்க் போட்டுக்கொண்டார்கள்; தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தார்கள். அதேசமயத்தில், உணவு பொருள்களை தயாரிக்கும் கம்பெனிகள் அதை சுத்தமான இடங்களில் தயாரிக்கிறார்களா, பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பார்சல்களை கொண்டுபோய் கொடுக்கிறவர்களும் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டார்கள். உதாரணத்துக்கு, அவர்கள் மாஸ்க் போட்டுக்கொண்டு இருக்கிறார்களா, அவர்கள் கொண்டுபோய் கொடுக்கும் வாகனங்கள் சுத்தமாக இருக்கின்றனவா, அந்த பார்சல்களை வைக்கும் இடங்கள் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறதா என்றெல்லாம் பார்த்துக்கொண்டார்கள். கடைசியாக, இந்த பார்சல்களை கொண்டுபோய் கொடுக்கும்போதும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தார்கள்.

நன்கொடைகள் கவனமாக பயன்படுத்தப்பட்டன

 ஜனவரி 2021 கணக்கின்படி, ஒருங்கிணைப்பாளர்களின் குழு 2,50,00,000 அமெரிக்க டாலர்களை கோவிட்-19 நிவாரண உதவிக்காக பயன்படுத்துவதற்கு ஒப்புதல் கொடுத்தது. இந்த நன்கொடைகளை கவனமாக பயன்படுத்துவதற்கு கிளை அலுவலகங்களும் பேரழிவு நிவாரண குழுக்களும் கடினமாக உழைத்தன. எவ்வளவு குறைவான நல்ல விலைக்கு பொருள்களை வாங்க முடியுமோ அவ்வளவு குறைவான விலையில் வாங்கினார்கள். சிலி நாட்டில் நடந்த ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். அங்கே இருந்த சகோதரர்கள் நிவாரண வேலைக்காக 750 கிலோ பருப்பு வகைகளை வாங்க நினைத்தார்கள். ஆனால், ஒரே மாதத்தில் பருப்பின் விலை இரண்டு மடங்கு அதிகமானது! ஆனாலும் பரவாயில்லை, நிவாரண வேலைக்காக வாங்கலாம் என்று முடிவு பண்ணினார்கள். அவர்கள் ஆர்டர் செய்து இரண்டு மணிநேரத்தில், கடைக்காரர் திரும்ப ஃபோன் செய்து, “வேறொரு கஸ்டமர் அவர் வாங்கின பருப்பை திரும்ப கொடுத்துவிட்டார். உங்களுக்கு வேண்டும் என்றால் அதை போன மாதத்தின் விலைக்கு தருகிறேன்” என்று சொன்னார்!

 ஆனால், பருப்பை வாங்குவதற்காக நம் சகோதரர்கள் போனபோது, கடைக்காரர் தர முடியாது என்று சொன்னார். மற்ற நிறுவனங்களை போலவே நாமும் ஏனோதானோவென்று உணவுகளை கொடுக்கிறோம் என்று அவர் நினைத்துவிட்டார். அப்போது, நம்முடைய சகோதரர் சுருக்கமாக ஒரு ஜெபம் செய்தார். பிறகு, அந்த கடைக்காரரிடம் இப்படி எடுத்து சொன்னார்: “நாங்கள் ஒவ்வொரு சபையிலும் நன்றாக சர்வே செய்திருக்கிறோம். யாருக்கு உண்மையிலேயே தேவை இருக்கிறது என்பதை பார்த்துதான் இந்த நிவாரண பொருள்களை கொடுக்கிறோம்.” அதோடு, சகோதரர்களுக்கு இடையே கலாச்சார வித்தியாசம் இருப்பதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்ன தேவை... எவ்வளவு தேவை... என்பதையெல்லாம் பார்த்துதான் நிவாரண பொருள்களை கொடுப்பதாகவும் சொன்னார். அதுமட்டுமல்ல, சாட்சிகளுக்கு கிடைக்கிற நன்கொடைகளெல்லாம் மனதார கொடுக்கப்படுகிறவை என்றும் இங்கே யாரும் காசுக்கு வேலை செய்வதில்லை என்றும் அவருக்கு புரியவைத்தார். இதைக் கேட்டு அந்த கடைக்காரர் ரொம்ப ஆச்சரியப்பட்டார். அதனால், சகோதரர்கள் கேட்ட அந்த பருப்பு வகைகளை அவர் கொடுத்தார். அதுமட்டுமல்ல, அடுத்த ஆர்டரில் அவருடைய சார்பாக 400 கிலோ பருப்பு வகைகளை இலவசமாகவும் கொடுத்தார்.

“உண்மையான அன்புக்கு அத்தாட்சி”

 லைபீரியாவில் வாழ்கிற வயதான சகோதரியின் அனுபவத்தை பார்க்கலாம். அவர் கணவனை இழந்த ஒரு பெண். அவருடைய வீட்டில் ஐந்து பேர் இருக்கிறார்கள். ஒருநாள் காலை அவர்கள் எல்லாரும் தினவசனத்தை படித்துவிட்டு, காலை உணவை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அப்போது, அவருடைய ஏழு வயது பேரன் அடுத்து சாப்பிடுவதற்கு வீட்டில் உணவு இல்லை என்பதை கவனித்தான். அதனால், அவனுடைய பாட்டியிடம் “அடுத்த வேளை நாம் என்ன சாப்பிடப் போகிறோம்?” என்று கேட்டான். அதற்கு அவர், தான் யெகோவாவிடம் ஜெபம் செய்திருப்பதாகவும் கண்டிப்பாக தங்களுக்கு ஏதாவது கொடுப்பார் என்றும் உறுதியாக சொன்னார். அன்றைக்கு மத்தியானமே சபையில் இருந்த மூப்பர்கள் ஃபோன் செய்து அவர்களுக்கு கொஞ்சம் உணவு பொருள்களை ஏற்பாடு செய்து இருப்பதாகவும் அதை வந்து வாங்கிக்கொள்ளும்படியும் சொன்னார்கள். அந்த வயதான பெண் இப்படி சொல்கிறார்: “யெகோவா நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்றும் அதற்கு கண்டிப்பாக பதில் கொடுக்கிறார் என்றும் இப்போது என் பேரன் உறுதியாக நம்புகிறான். ஏனென்றால், என்னுடைய ஜெபத்துக்கு அவர் பதில் கொடுத்ததை அவன் பார்த்தான்.”

காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருக்கிற குழந்தைகள் படங்களை வரைந்து அங்கிருந்த சகோதரர்கள் செய்த நிவாரண உதவிக்கு நன்றி சொன்னார்கள்

 நாம் செய்கிற நிவாரண வேலைகளை பார்த்த ஒரு பெண் என்ன சொல்கிறார் என்று இப்போது பார்க்கலாம். அவர் காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருக்கிறார். அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் ஒரு யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பம் இருக்கிறது. பெருந்தொற்று சமயத்தில் மற்ற சாட்சிகள் வந்து இந்த குடும்பத்துக்கு உணவு கொடுத்ததை அவர் பார்த்தார். அதனால், “லாக்-டவுன் முடிந்த பிறகு நாங்களும் யெகோவாவின் சாட்சிகளாக மாறிவிடுவோம். ஏனென்றால், இந்த கஷ்டமான காலத்தில் அவர்கள்தான் தங்களுடைய சகோதர சகோதரிகள்மேல் உண்மையிலேயே அக்கறை காட்டியிருக்கிறார்கள்” என்று சொன்னார். அவருடைய கணவர் அதற்கு, “இந்த ஒரு மூட்டை அரிசிக்காகவா நீ யெகோவாவின் சாட்சியாக மாறப்போகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய மனைவி, “இல்லை! அப்படி சொல்லவில்லை. ஆனால் இந்த ஒரு மூட்டை அரிசியே அவர்களுடைய உண்மையான அன்புக்கு அத்தாட்சி!” என்று சொன்னார்.

 நீங்கள் மனதார கொடுக்கிற நன்கொடைகளால்தான், யெகோவாவின் சாட்சிகளால் இந்த பெருந்தொற்று சமயத்தில் உடனடியாக சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய முடிந்திருக்கிறது. donate.isa4310.com-ல் சொல்லியிருக்கிற வழிகள் மூலம் நீங்கள் கொடுக்கிற நன்கொடைகளுக்கு நாங்கள் ரொம்ப நன்றி சொல்கிறோம்!