Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

எரேமியா 29:11—“நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்”

எரேமியா 29:11—“நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்”

 “யெகோவா a சொல்வது இதுதான்: ‘நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்.’”—எரேமியா 29:11, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.”—எரேமியா 29:11, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.

எரேமியா 29:11-ன் அர்த்தம்

 தன்னை வணங்குபவர்களுக்குச் சமாதானமான எதிர்காலத்தைத் தரப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். பைபிள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்றும் யெகோவாவின் மனதில் இருப்பதைப் இது படம்பிடித்துக் காட்டுகிறது. அவர் “நம்பிக்கை தருகிற கடவுள்.” (ரோமர் 15:13) சொல்லப்போனால், இதுபோன்ற வாக்குறுதிகளை அவர் பைபிளில் பதிவு செய்திருப்பதே, ஒரு நல்ல எதிர்காலம் வரும் என்ற ‘நம்பிக்கையை நமக்குக் கொடுப்பதற்காகதான்!’—ரோமர் 15:4.

எரேமியா 29:11-ன் பின்னணி

 இஸ்ரவேலர்கள் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள். அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இந்த வசனத்திலிருக்கும் வார்த்தைகளும் இருந்தன. b (எரேமியா 29:1) பாபிலோனில் ரொம்ப நாட்களுக்குக் கைதிகளாக இருப்பார்கள் என்று இஸ்ரவேலர்களிடம் கடவுள் சொன்னார். அதனால், அங்கே வீடுகளைக் கட்டி, தோட்டங்களை அமைத்து, கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும்படி கைதிகளாக இருந்த ஜனங்களிடம் கடவுள் சொன்னார். (எரேமியா 29:4-9) ஆனாலும், “நீங்கள் பாபிலோனில் 70 வருஷம் இருந்த பின்பு, நான் வாக்குக் கொடுத்தபடியே மறுபடியும் [எருசலேமுக்கு] உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்’’ என்று கடவுள் அவர்களிடம் சொன்னார். (எரேமியா 29:10) இப்படிச் சொல்வதன் மூலம், தான் அவர்களை மறக்க மாட்டேன் என்றும் தங்களுடைய தேசத்திற்கே திரும்பி போக வேண்டும் என்ற அவர்களின் கனவு நிஜமாகும் என்றும் கடவுள் உறுதியளித்தார்.—எரேமியா 31:16, 17.

 யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். அவர் முன்பே சொன்னதுபோல், பெர்சிய ராஜா கோரேஸ் பாபிலோனைக் கைப்பற்றினார். (ஏசாயா 45:1, 2; எரேமியா 51:30-32) அதன்பின்பு, யூதர்கள் தங்களுடைய தேசத்துக்கே திரும்பிப்போக கோரேஸ் அனுமதி கொடுத்தார். 70 வருஷங்களுக்குக் கைதிகளாக இருந்தப் பிறகு, அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு திரும்பி போனார்கள்.—2 நாளாகமம் 36:20-23; எஸ்றா 3:1.

 எரேமியா 29:11-ல் தான் கொடுத்த வாக்குறுதியைக் கடவுள் காப்பாற்றினார். அதனால், கொடுத்த வாக்கை இனிமேலும் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை நமக்கு அதிகமாக்குகிறது. கடவுளுடைய அரசாங்கத்தின் மூலமாக இந்த முழு பூமியும் சமாதானமான ஓர் இடமாக மாறும் என்பதும் அந்த வாக்குறுதிகளில் ஒன்று.—சங்கீதம் 37:10, 11, 29; ஏசாயா 55:11; மத்தேயு 6:10.

எரேமியா 29:11-ஐப் பற்றிய தவறான கருத்துகள்

 தவறான கருத்து: “உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்” என்று சொல்லும்போது, ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் என்ன நடக்க வேண்டும் என்பதை கடவுள் முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருக்கிறார்.

 உண்மை: நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். எரேமியா 29:11-ல் இருக்கும் வார்த்தைகளை பாபிலோனில் கைதிகளாக இருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் கடவுள் சொன்னார். அவர்களுக்கு சமாதானமான எதிர்காலத்தைத் தர வேண்டும் என்ற எண்ணம் கடவுளுக்கு இருந்தது. (எரேமியா 29:4) ஆனால், இதுபோன்ற ஓர் எதிர்காலம் வேண்டுமா வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை கடவுள் அவர்களிடம் கொடுத்தார். (உபாகமம் 30:19, 20; எரேமியா 29:32) கடவுளிடம் ஜெபம் செய்ததன் மூலம் அவர் பக்கம்தான் இருக்கிறோம் என்பதை அவர்கள் காட்டினார்கள்.—எரேமியா 29:12, 13.

எரேமியா 29-வது அதிகாரத்தை அடிக்குறிப்புகளோடும் இணை வசனங்களோடும் சேர்த்து வாசித்துப் பாருங்கள்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.

b எரேமியா 29:11-யைப் பற்றி தி எக்ஸ்பாசிட்டர்ஸ் பைபிள் கமென்ட்டரி இப்படிச் சொல்கிறது: “சிறைபிடிக்கப்பட்டு போனவர்களுக்கு யாவே [யெகோவா] காட்டின கரிசனையை தெளிவாக படம்பிடித்து காட்டிய ஓர் அருமையான வாக்குறுதி இது. எதிர்காலத்துக்காக ஆவலோடு காத்திருப்பதற்கு தேவையான தெம்பை அவர்களுக்குக் கொடுத்தது.”—பதிப்பு 7, பக்கம் 360.