Skip to content

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

பிள்ளைகளும் ஸ்மார்ட்ஃபோன்களும் ​—பகுதி 1: என் பிள்ளைக்கு ஸ்மார்ட்ஃபோன் தேவையா?

பிள்ளைகளும் ஸ்மார்ட்ஃபோன்களும் ​—பகுதி 1: என் பிள்ளைக்கு ஸ்மார்ட்ஃபோன் தேவையா?

 இன்று நிறைய பிள்ளைகள் கையில் ஸ்மார்ட்ஃபோன் a இருக்கிறது. அதில் இன்டர்நெட் வசதியும் இருக்கிறது. தனியாக இருக்கும்போது அவர்கள் அதை பயன்படுத்துகிறார்கள். பிள்ளைகளுக்கு ஃபோன் வாங்கி கொடுப்பதில் என்ன ஆபத்துகள் இருக்கின்றன? என்ன நன்மைகள் இருக்கின்றன? அதை அவர்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள்?

 நீங்கள் எதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

 நன்மைகள்

  •   பிள்ளைகளுக்கு பாதுகாப்பு, பெற்றோருக்கு நிம்மதி. ”நாம ஆபத்தான உலகத்தில வாழ்ந்திட்டு இருக்கோம். பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்து வந்தா அப்பா-அம்மாவை கூப்பிட அவங்ககிட்ட கண்டிப்பா ஒரு ஃபோன் இருக்கணும்“ என்று இரண்டு டீனேஜ் பிள்ளைகளுக்கு அம்மாவான பெத்தனி சொல்கிறார்.

     ”சில ஆப்-ஐ வச்சி என் ஃபோனை என் பையன் ஃபோனோட இணைக்கலாம். அவன் எங்க இருக்கான், வண்டி ஓட்டிட்டு இருந்தா எவ்வளவு வேகத்தில போறான்னு எல்லாம் தெரிஞ்சிக்கலாம்“ என்று கேத்தரீன் என்ற ஒரு அம்மா சொல்கிறார்.

  •   ஸ்கூல் பாடங்களை செய்ய உதவுகிறது. ”பிள்ளைகளுக்கு ஹோம்வர்க் எல்லாம் இமெயில், மெசேஜ்லதான் வருது. அத பத்தி அவங்க டீச்சர்கிட்ட பேசுறதுக்கும் ஃபோன் தேவைதான்“ என்று மேரி என்ற ஒரு அம்மா சொல்கிறார்.

 ஆபத்துகள்

  •   அளவுக்கு அதிகமாக ஃபோனை பயன்படுத்துவது. இளம் பிள்ளைகள் ஒரு நாளில் பல மணிநேரம் ஃபோனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். அதேபோல் பெற்றோர்களும் பிள்ளைகளோடு பேசும் நேரம் தவிர மற்ற சமயங்களில் ஃபோனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். இன்று நிறைய வீடுகள், ”ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தமே இல்லாம... மெஷின்களோட வாழுற சிலபேர் தினமும் வந்துபோற இடமா இருக்கு“ என்று ஒரு ஆலோசகர் சொல்கிறார். b

  •   ஆபாசப் படங்கள். ஒவ்வொரு மாதமும் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான டீனேஜர்கள் ஆபாசப் படங்களைத் தேடிப் பார்க்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்று எல்லாருடைய கையிலும் ஃபோன் இருக்கிறது. அதில் சுலபமாக ஆபாசப் படங்களை பார்க்கிறார்கள். ”பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்கி கொடுப்பது, அவங்க எங்க வேணாலும் எப்போ வேணாலும் ஆபாசப் படங்களை பார்க்க நாமளே வழிசெஞ்சி கொடுக்கிற மாதிரி இருக்கும்“ என்று இரண்டு டீனேஜ் பிள்ளைகளுக்கு அப்பாவான வில்லியம் சொல்கிறார்.

  •   ஃபோனுக்கு அடிமை. இன்று நிறைய பேரால் ஃபோன் இல்லாமல் இருக்க முடிவதில்லை. ஒருவேளை மறந்துபோய் ஃபோனை எங்கேயாவது வைத்துவிட்டால், பதற்றத்தில் பைத்தியம் பிடித்த மாதிரி ஆகிவிடுகிறார்கள். சிலருக்கு உடம்பு சரியில்லாமல்கூட போய்விடுகிறது. ஃபோனை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது சில பிள்ளைகள் எடுத்தெறிந்து பேசுவதாக சில பெற்றோர்கள் கவனித்திருக்கிறார்கள். ”என் பையன் ஃபோனை பார்த்துட்டு இருக்கும்போது நான் அவன்கிட்ட ஏதாவது பேசப் போனா, அவனுக்கு அது சுத்தமா பிடிக்காது. கேவலமா ஒரு பார்வை பார்த்துட்டு மரியாதை இல்லாம ஏதாவது சொல்லுவான்“ என்று கார்மென் என்கிற ஒரு அம்மா சொல்கிறார்.

  •   வேறு சில ஆபத்துகள். ­­ஃபோன் மூலமாக வேறு சில ஆபத்துகளும் வரலாம். ஆன்லைனில் யாராவது உங்களை மிரட்டலாம். ஆபாச படங்களையோ மெசேஜையோ அனுப்பலாம். சரியா தூங்காமல் ஏடாகூடமாக உட்கார்ந்து ஃபோனையே பார்த்துக்கொண்டிருப்பதால் சில உடல்நல பிரச்சினைகளும் வரலாம். சில இளம் பிள்ளைகள் ”கோஸ்ட் ஆப்“-ஐ பயன்படுத்துகிறார்கள். அது பார்க்க ஒன்றுமில்லாத சாதாரண கால்குலேட்டர் மாதிரி இருக்கலாம். அப்பா-அம்மா கண்ணில் படாமல் நிறைய விஷயங்களை ஒளித்து வைப்பதற்காக இந்த ஆப்-ஐ பிள்ளைகள் பயன்படுத்துகிறார்கள்.

     ”இன்டெர்நெட்-ல நல்லது கெட்டதுனு நிறைய இருக்கு. அது எல்லாத்தையுமே ஸ்மார்ட்ஃபோன்ல பார்க்க முடியும்“ என்று ஒரு டீனேஜ் பெண்ணின் அப்பா டேனியெல் சொல்கிறார்.

 நீங்கள் என்னென்ன கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்?

  •   ‘என் பிள்ளைக்கு ஸ்மார்ட்ஃபோன் தேவையா?’

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) இதை மனதில் வைத்து உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்:

     ‘பாதுகாப்புக்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் என் பிள்ளைக்கு கண்டிப்பா ஒரு ஃபோன் தேவையா? அதிலிருக்கும் நல்லதும் கெட்டதும் எனக்குத் தெரியுமா? ஃபோனுக்கு பதிலாக வேறு எதையாவது பயன்படுத்த முடியுமா?’

     ”இன்டர்நெட் இல்லாத சாதாரண ஃபோன்கள் எல்லாம் இன்னும் கிடைக்குது. அதுல உங்க பிள்ளைகளுக்கு மெசேஜ் பண்ணவும் முடியும் பேசவும் முடியும். அதனால பணமும் மிச்சமாகும்“ என்று டாட் என்ற அப்பா சொல்கிறார்.

  •   ‘ஃபோனை சரியாக பயன்படுத்த என் பிள்ளைக்குத் தெரியுமா?’

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஞானமுள்ளவரின் இதயம் அவரை நேர் வழியில் கொண்டுபோகும்.” (பிரசங்கி 10:2) இதை மனதில் வைத்து உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்:

     ‘என் பிள்ளையை நான் நம்புவதற்கு என்ன நியாயமான காரணங்கள் இருக்கின்றன? பொதுவாக என் பிள்ளை என்னிடம் வெளிப்படையாக பேசுவானா? இதற்கு முன்பு என் பிள்ளை என்னிடமிருந்து எதையாவது மறைத்திருக்கிறானா? ஒருவேளை அவன் யாரோடு பழகுகிறான் என்பதை என்னிடமிருந்து மறைத்திருக்கிறானா? டிவி, டேப்லட், லேப்டாப் இந்த மாதிரி கேட்ஜட்டுகளை அளவாக பயன்படுத்துகிறானா?’ செரீனா என்ற ஒரு அம்மா இப்படி சொல்கிறார்: ”ஸ்மார்ட்ஃபோன் நல்லதுதான். ஆனா நீங்க அத ஸ்மார்ட்டா பயன்படுத்தலனா அதில ஆபத்தும் இருக்கு. பிள்ளைங்க இந்த வயசுல இது எல்லாத்தையும் நல்லா புரிஞ்சிட்டு ஃபோனை சரியா பயன்படுத்துவாங்களானு யோசிச்சி பாருங்க.“

  •   ‘என் பிள்ளை கையில் ஃபோனை கொடுக்க நான் தயாரா?’

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு.” (நீதிமொழிகள் 22:6) இதை மனதில் வைத்து உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்:

     ‘ஃபோனில் இருக்கிற ஆபத்துகளை புரிந்து நடக்க என் பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க எனக்கு தெரியுமா? பிள்ளைகளுக்கு ஏற்ற மாதிரி ஃபோன் செட்டிங்கை மாற்றி வைக்க எனக்குத் தெரியுமா? ஃபோனில் எதை பார்க்கலாம் எதை பார்க்க கூடாது என்று தீர்மானிக்க என் பிள்ளைக்கு எப்படி சொல்லிக் கொடுப்பேன்?’ ஏற்கெனவே பார்த்த டேனியேல் என்ற அப்பா இப்படிச் சொல்கிறார்: ”இப்போ எல்லாம் நிறையபேர் சும்மா அவங்க பிள்ளைங்க கையில ஃபோனை கொடுத்துடுறாங்க. பிள்ளைங்க அதுல என்ன செய்றாங்கனு கவனிக்கிறதே இல்ல.“

 என்ன கற்றுக்கொள்கிறோம்: பிள்ளைகள் ஸ்மார்ட்ஃபோனை பொறுப்பாக பயன்படுத்த சொல்லிக்கொடுக்க வேண்டும். ”அப்பா-அம்மா பக்கத்தில் இல்லையென்றாலும் பிள்ளைகள் ஃபோனை அளவோடு பயன்படுத்த கற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை“ என்று இன்டிஸ்ட்ராக்டபில் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.

a இந்தக் கட்டுரையில் ”ஸ்மார்ட்ஃபோன்“ என்ற வார்த்தை இன்டர்நெட் வசதியுள்ள எல்லா ஃபோன்களையும் குறிக்கிறது.

b தாமஸ் கெர்ஸ்டிங் எழுதிய டிஸ்கணக்டெட் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.