Skip to content

குடும்ப ஸ்பெஷல் | திருமணம்

ஆபாசம் உங்கள் திருமண வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிவிடலாம்

ஆபாசம் உங்கள் திருமண வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிவிடலாம்

 ரகசியமாக அவர் செய்துகொண்டிருந்ததை அவருடைய மனைவி கண்டுபிடித்துவிட்டார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார். ‘திரும்ப செய்யமாட்டேன்’ என்றும் சொன்னார். சொன்ன மாதிரியே கொஞ்ச நாட்கள் இருந்தார். ஆனால் மறுபடியும் ஆரம்பித்துவிட்டார். இப்போது திரும்பவும் எல்லாம் முதலிலிருந்து ஆரம்பிக்கிறது.

 நீங்களும் அவருடைய நிலைமையில்தான் இருக்கிறீர்களா? ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறது என்றால், அது எப்படி உங்கள் துணையைப் பாதிக்கும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பழக்கத்திலிருந்து எப்படி ஒரேயடியாக வெளியே வரலாம் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். a

இந்தக் கட்டுரையில்

 நீங்கள் எதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

 ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் கல்யாண வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிவிடும். ஆபாசத்தைப் பார்த்த நபரை, அவருடைய துணையால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நபர்மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும் கஷ்டமாகிவிடும். b

 ஆபாசத்தைப் பார்க்கும் ஒருவருடைய மனைவிக்கு இந்த மாதிரியான எண்ணங்கள் வரலாம்:

  •   நம்பிக்கைத் துரோகம். சாரா என்ற மனைவி இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய கணவர் திரும்பத் திரும்ப வேறு பெண்ணோடு செக்ஸ் வைத்துக்கொண்ட மாதிரி எனக்கு இருந்தது.”

  •   எதற்கும் லாயக்கில்லை என்ற உணர்வு. கணவருக்கு ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் இருந்ததால், ஒரு மனைவி தான் ரொம்ப அசிங்கமாகவும், கேவலமாகவும் இருப்பதாக நினைத்தார்.

  •   சந்தேகம். “என் கணவர் செய்கிற ஒவ்வொரு விஷயத்தையும் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டேன்” என ஹெலன் என்ற மனைவி சொல்கிறார்.

  •   கவலை. “என் கணவரைப் பற்றிக் கவலைப்பட்டு கவலைப்பட்டே என் வாழ்க்கை முடிந்துவிடும்போல் இருக்கிறது” என்று கேத்தரின் என்ற மனைவி சொல்கிறார்.

 யோசித்துப்பாருங்கள்: மனைவிமீது கணவர் அன்பு காட்ட வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:25) நாம் இதுவரை பார்த்த மாதிரியான ஒரு எண்ணத்தை மனைவிக்கு கணவர் கொடுத்தால் அவர் அன்பு காட்டுகிறார் என்று சொல்ல முடியுமா?

 நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தை விடுவது ரொம்பக் கஷ்டம்தான். “என்னுடைய கணவர் சிகரெட், போதைப் பொருள், குடிப்பழக்கம் போன்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டார். ஆனால் ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தை விடமுடியாமல் இன்னும் அவர் கஷ்டப்படுகிறார்” என்று ஸ்டேசி என்ற மனைவி சொல்கிறார்.

 நீங்களும் அதே நிலைமையில்தான் இருக்கிறீர்கள் என்றால் ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தை ஒரேயடியாக விடுவதற்கு இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு உதவி செய்யும்.

  •   ஆபாசத்தைப் பார்ப்பது ரொம்ப மோசமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆபாசத்தைப் பார்க்கிற ஒருவர் சுயநலமாக நடந்துகொள்வார். அவர் ஆசைப்படுவதைச் செய்யத்தான் குறியாக இருப்பார். இப்படி நடந்துகொண்டால் சந்தோஷமான கல்யாண வாழ்க்கைக்குத் தேவையான அன்பு, நம்பிக்கை, உண்மை ஆகியவை இல்லாமல் போய்விடும். திருமண பந்தத்தை ஏற்படுத்தி வைத்த யெகோவா தேவனுக்கும் இது மரியாதை காட்டாதது போல ஆகிவிடும்.

     பைபிள் ஆலோசனை: “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்.”—எபிரெயர் 13:4.

  •   தவறை ஒத்துக்கொள்ளுங்கள், சாக்குச் சொல்லாதீர்கள். ‘என் மனைவி என்னிடம் அன்பாக இருந்தால், நான் ஏன் ஆபாசத்தைப் பார்க்கப் போகிறேன்!’ என்று சொல்லாதீர்கள். ஆபாசத்தை நீங்கள் பார்த்துவிட்டு அதற்கு உங்கள் மனைவியைக் காரணம் காட்டுவது கொஞ்சம்கூட நியாயம் கிடையாது. மனைவிமீதே பழிபோட்டு பழகிவிட்டால், மனைவியோடு சண்டை வரும்போதெல்லாம் அதையே சாக்காக வைத்து ஆபாசத்தைப் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

     பைபிள் ஆலோசனை: “ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான்.”—யாக்கோபு 1:14.

  •   உங்கள் துணையிடம் எதையும் மறைக்காதீர்கள். கெவின் என்ற கணவர் இப்படிச் சொல்கிறார்: “மோசமான ஒரு விஷயம் என் கண்ணில்படும்போது உடனே நான் திரும்பிக்கொள்கிறேனா இல்லையென்றால் திரும்பவும் அதைப் பார்க்கிறேனா என்று என் மனைவியிடம் தினமும் கேட்டுக்கொள்வேன். இப்படிக் கேட்பதால் அவளிடம் எனக்கு எந்த ஒளிவுமறைவும் இல்லை.”

     பைபிள் ஆலோசனை: “நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.”—எபிரெயர் 13:18.

  •   உஷாராக இருங்கள். நீங்கள் உஷாராக இல்லையென்றால் எத்தனை வருஷங்கள் ஆனாலும் சரி, நீங்கள் அசந்த நேரம் பார்த்து இந்தப் பழக்கம் திரும்பவும் தலைதூக்க ஆரம்பித்துவிடும். நாம் ஏற்கெனவே பார்த்த கெவின் இப்படிச் சொல்கிறார்: “ஆபாசத்தை நான் பார்ப்பதை விட்டு பத்து வருஷங்கள் ஆகிவிட்டன. அதற்குப் பிறகு அந்தப் பிரச்சினை எனக்கு இல்லை என்று நான் நினைத்தேன். ஆனால் இன்னமும் அந்தப் பழக்கம் எனக்குள் ஒளிந்துகொண்டுதான் இருந்திருக்கிறது. சரியான சமயம் பார்த்து தலைதூக்க அது காத்துக்கொண்டு இருந்திருக்கிறது.”

     பைபிள் ஆலோசனை: “தான் நிற்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறவன் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”—1 கொரிந்தியர் 10:12.

  •   ஆசை வந்தால் அவசரப்படாதீர்கள். தப்பான ஆசை வருவதைத் தடுக்க முடியாதுதான். ஆனால் அதற்கு இணங்கி போவதா வேண்டாமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. அந்த ஆசையை உங்களால் விரட்டியடிக்க முடியும். ஒருவேளை வேறு ஏதாவது வேலையில் நீங்கள் கவனம் செலுத்தினால், நினைத்ததைவிட வேகமாகவே அதை விரட்டியடிக்க முடியும்.

     பைபிள் ஆலோசனை: “உடலைப் பரிசுத்தமாகவும் மதிப்புள்ளதாகவும் வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். . . . திருப்தியடையாமல் கட்டுக்கடங்காத காமப்பசிக்கு . . . இடம்கொடுக்கக் கூடாது.”—1 தெசலோனிக்கேயர் 4:4, 5.

  •   கெட்ட ஆசையைத் தூண்டும் சூழ்நிலையைத் தவிர்த்திடுங்கள். “தவறான ஆசையைத் தூண்டிவிடுவதுபோல் ஒரு சூழ்நிலையில் நீங்கள் மாட்டிக்கொண்டால் அது வத்தி குச்சியைப் பற்றவைப்பதுபோல் ஆகிவிடும். கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றினால் போதும் . . . அது குப்பென்று பற்றிக்கொள்ளும்” என்று வில்பவர்ஸ் நாட் இனாஃப் என்ற புத்தகம் சொல்கிறது.

     பைபிள் ஆலோசனை: “கெட்டது எதுவும் என்னை ஆட்டிப்படைக்காமல் இருக்கட்டும்.”—சங்கீதம் 119:133.

  •   நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். உங்கள் துணையின் நம்பிக்கையைச் சம்பாதிக்க நிறைய நாட்கள் ஆகலாம். ஒருவேளை வருஷங்கள்கூட ஆகலாம். ஆனால், உங்கள் துணையின் நம்பிக்கையை கண்டிப்பாகச் சம்பாதிக்க முடியும் என்று நிறைய தம்பதிகளின் அனுபவங்கள் காட்டுகின்றன.

     பைபிள் ஆலோசனை: “அன்பு பொறுமை . . . உள்ளது.”—1 கொரிந்தியர் 13:4.

a இந்தக் கட்டுரையில் கணவர்களைப் பற்றிச் சொல்லியிருந்தாலும் ஆபாசத்தைப் பார்க்கும் மனைவிகளுக்கும் இதில் சொல்லியிருக்கும் விஷயங்கள் பொருந்தும்.

b கணவன் மனைவி இரண்டு பேருமே ஆபாசத்தைச் சேர்ந்து பார்த்தால் அவர்கள் இன்னும் நெருக்கமாக ஆவார்கள் என்று சில தம்பதிகள் சொல்கிறார்கள். ஆனால் பைபிள் அதை ஆதரிப்பது கிடையாது.—நீதிமொழிகள் 5:15-20; 1 கொரிந்தியர் 13:4, 5; கலாத்தியர் 5:22, 23.