Skip to content

நவம்பர் 4, 2023 அன்று இந்தியாவிலுள்ள கேரளாவில் நடந்த விசேஷக் கூட்டத்தில் யெகோவாவின் சாட்சிகள் ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள்

நவம்பர் 17, 2023 | டிசம்பர் 8, 2023 அன்று அப்டேட் செய்யப்பட்டது
இந்தியா

அப்டேட்—இந்தியாவில் நடந்த சோக சம்பவம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்வு

அப்டேட்—இந்தியாவில் நடந்த சோக சம்பவம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்வு

இந்தியாவிலுள்ள கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பில் இன்னும் இரண்டு உயிரிழப்பு. அதில் ஒருவர், 76 வயதுள்ள ஒரு சகோதரர். அவர் ஒரு மூப்பராகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்துவந்தார். டிசம்பர் 2, 2023 அன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வருத்தமான விஷயம் என்னவென்றால் 5 நாட்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 7, வியாழன் அன்று, அவருடைய மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சகோதரியும் ஒரு ஒழுங்கான பயனியராக சேவை செய்துவந்தார். இந்தக் கொடூர குண்டுவெடிப்பு சம்பவம் இதுவரை 8 பேருடைய உயிரைப் பறித்துள்ளது.

அக்டோபர் 29, 2023, ஞாயிறு அன்று இந்தியாவிலுள்ள கேரளாவில் நடந்த மண்டல மாநாட்டில் சில குண்டுவெடிப்புகள் நடந்தன. அந்த விபத்தில் ஏற்கெனவே 3 பேர் இறந்துவிட்டார்கள். இப்போது இன்னும் 1 சகோதரரும் 2 சகோதரிகளும் இறந்துவிட்டார்கள். அதில் 2 பேர், ஏற்கெனவே உயிரிழந்த 12 வயது சிறுமியின் அம்மா மற்றும் சகோதரன். இன்னும் 11 சகோதர சகோதரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுக்க ஒரு விசேஷக் கூட்டத்தை இந்திய கிளை அலுவலகம் ஏற்பாடு செய்தது.‏ அந்தக் கூட்டம் நவம்பர் 4, 2023 அன்று நடந்தது. குண்டுவெடிப்பு நடந்த மாநாட்டில், 21 சபையைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாருக்குமே இந்த விசேஷக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு கிடைத்தது.‏ அந்தக் கூட்டம், கேரளாவில் இருக்கும் ஒரு ராஜ்ய மன்றத்தில் நடந்தது. அதில் கிட்டத்தட்ட 200 பேர் நேரில் கலந்துகொண்டார்கள். 1,300 பேர், வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாகக் கலந்துகொண்டார்கள். மருத்துவமனையில் இருக்கிறவர்களுக்கு, இந்த நிகழ்ச்சி பதிவு செய்து கொடுக்கப்பட்டது. கிளை அலுவலகத்திலிருந்து வந்த ஒரு மூப்பர், தான் கொடுத்த பேச்சில் சங்கீதம் 23:1-ஐப் பற்றிச் சொன்னார். யெகோவா எப்படி தன்னுடைய ஊழியர்கள் ஒவ்வொருவர் மேலும் தனிப்பட்ட அக்கறை வைத்திருக்கிறார் என்பதை இப்படி விளக்கினார்: “இந்த வசனத்தில், யெகோவா ஒரு மேய்ப்பராக இருக்கிறார் என்றோ யெகோவா ஒரு பிரமாதமான மேய்ப்பராக இருக்கிறார் என்றோ சங்கீதக்காரன் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, யெகோவா ‘என் மேய்ப்பராக’ இருக்கிறார் என்று சொல்கிறார். யெகோவா நம் ஒவ்வொருவர் மேலும் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வது ரொம்பவே ஆறுதலாக இருக்கிறது, இல்லையா!”

சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் அன்பாக ஆறுதல் சொல்கிறார்கள்

அந்தக் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்த ஒரு சகோதரரால் இன்னமும் இரவில் சரியாகத் தூங்க முடிவதில்லை.‏ ஆனாலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு அவர் உதவி செய்கிறார். அவர் சொல்கிறார்: “அங்கு இருக்கிறவர்களுடைய விசுவாசத்தையும் நம்பிக்கையான மனநிலையையும் பார்த்தது என்னுடைய கவலைகளை மறக்க எனக்கு உதவி செய்தது.‏ காயங்களோடு, வலி வேதனையோடு இருந்தாலும் அவர்களில் நிறைய பேர் சந்தோஷமாக ராஜ்ய பாடல்களைப் பாடிக்கொண்டு இருந்தார்கள்.” இன்னொரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “இங்கு இருக்கிற சில அன்பானவர்கள், பழைய நிலைமைக்கு வருவதற்கு இன்னும் நிறைய நாட்கள் எடுக்கலாம்.‏ ஆனாலும் சகோதர சகோதரிகள் அவர்களைத் தொடர்ந்து அன்பாகப் பார்த்துக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும்.‏ நம்மேல் உயிரையே வைத்திருக்கிற கடவுள், இங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் அவருடைய உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.‏ இதைப் பார்ப்பது எனக்குப் புது தெம்பைத் தருகிறது.‏”

இந்தியாவிலிருக்கும் நம்முடைய அன்பான சகோதர சகோதரிகளுடைய ‘உடைந்துபோன உள்ளங்களை யெகோவா தொடர்ந்து குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களுக்குக் கட்டுப் போடுகிறார்.’ (சங்கீதம் 147:3) இதைத் தெரிந்துகொள்வது, யெகோவாவுடைய குடும்பத்தில் இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது.